கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கிளினிக்கு சென்ற வயோதிப மற்றும் நடுத்தர வயதுப் பெண்களை மயக்கத்தில் ஆழ்த்தி அவர்களது பணம் மற்றும் தங்க நகைகளை களவாடிய சம்பவத்தில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளர்.
இவர்கள் இருவரும் இணைந்து திருடிய சுமார் 12 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் வெலிகம பிரதேசத்தில் தங்கப் பொருட்களை கொள்வனவு செய்யும் இடத்திற்கு விற்ற பின்னர் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர்கள் வைத்தியசாலைக்கு வரும் வயதான மற்றும் நடுத்தர வயது பெண்களுடன் நட்பாக பழகி, அவர்களுக்கு மயக்கம் ஏற்படுத்தும் வகையில் உணவு அல்லது பானம் வழங்கி அவர்களை மயக்கமடைய செய்து தங்க நகைகள் மற்றும் பணப்பையை திருடிச் சென்றதாக தெரியவந்தது.
சந்தேக நபருடன் இருக்கும் பெண்கள் மயக்க நிலையில் காணப்படும் போது அவர்களுக்கு சந்தேகம் வராத வகையில் தமக்கு உதவி செய்யும் நபர் போன்று நடித்து தங்க நகை கொள்ளையடிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.